செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 413 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 391 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. இன்று புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் கோயம்பேடு சந்தையை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆவர். தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 342 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை, செங்கல்பட்டில் 66 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா சிகிச்சையில் தப்பித்து சென்ற நபர் ஒருவர் இன்று மரணமடைந்துள்ளார். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட 52 வயது நபர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஊரப்பாக்கத்தை சேர்ந்த அந்த நபருக்கு கடந்த 8ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனை அறிந்த உடன் அங்கிருந்து தப்பித்து சென்று தலைமறைவானார். அவரை தேடி கண்டுபிடித்து மருத்துவமனையில் காவல்துறை அதிகாரிகள் சேர்ந்தனர். இந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து செங்கல்பட்டில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.