தமிழகத்தில் சென்னை,கோவை, திருவண்ணாமலை மாவட்டங்கள் பரிசோதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளன…!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப்பரவல் நிலைக்கு சென்று விட்டதா என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். நான்கு கட்டங்களைக் கொண்ட கொரோனா பரவலில் முதல் கட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கும். இரண்டாம் கட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று வைரஸ் பரவுகிறது. 3ம் கட்டத்தில் வெளிநாடு செல்லாதவர்களுக்கும்,வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களோடு எந்த தொடர்பும் இல்லாதவர்களுக்கும் சமூக தொற்றாக வைரஸ் பரவும். மிகவும் அபாயகரமான இந்த கட்டத்திற்கு இந்தியா வந்துவிட்டதா என பல்வேறு தரப்பினரும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால் சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மூன்றாம் நிலையான சமூக பரவலை அடைந்துவிட்டதா என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்த உள்ளனர். இதற்காக நாடு முழுவதும் வைரஸ் தொற்று அதிகம் உள்ள 75 ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் மத்திய சுகாதாரத் துறையுடன் இணைந்து ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர். குறிப்பிட்ட மாவட்டத்தில் 10 இடங்களில் 400 ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை,கோவை, திருவண்ணாமலை இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.