கேரளாவில் சிறுவன் ஒருவன் தனது அக்கா உட்பட 5 பேர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளான்.
கோழிக்கோடு பெரிய பாலத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் உமர் தன்னை தனது சகோதரி மற்றும் அவரது தோழிகள் விளையாட்டிற்கு சேர்த்துக் கொள்ளாத காரணத்தினால் கோபத்தில் இருந்துள்ளான். அப்பொழுது அந்த வழியாக சென்ற காவலரை பார்த்தவுடன் உடனடியாக புகார் கடிதம் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதி காவலரிடம் கொடுத்துள்ளார். அதில் நான் அபெக்ஸ் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறேன் எனது பக்கத்து வீட்டு பெண்கள் 5 பேரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுங்கள் என கூறி 5 பேரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளான்.
சிறுவனின் புகாரை ஏற்றுக்கொண்ட காவலர் அவன் வீட்டிற்கு சென்று சிறுமிகள் அனைவரையும் அமரவைத்து பேசி சமாதானப்படுத்தினார். அப்பொழுது சிறுவன் தன்னை பையன் என்பதால் அவர்களுடன் விளையாட சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று கூறி கிண்டல் செய்வதாகவும், வீட்டில் சென்று டிவி பார்க்க சொல்வதாகவும் கூறியுள்ளான். ஊரடங்கு காரணமாக வெளியே சென்று என் நண்பர்களுடன் விளையாட முடியவில்லை என தனது நிலையை சிறுவன் கூறியுள்ளான்.
இதனைத் தொடர்ந்து சிறுமிகள் உமரை இனி நாங்கள் விளையாட்டில் சேர்த்துக் கொள்கிறோம். அவனை கிண்டல் செய்ய மாட்டோம் என உறுதி அளித்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த சிறுவன் காவலருக்கு நன்றி தெரிவித்தான். பிரச்சனை என்றால் காவலரை அணுகலாம் என்ற சிறுவனின் எண்ணத்திற்கு மதிப்பு கொடுக்கவே புகாரை ஏற்றுக் கொண்டதாக காவலர் கூறியுள்ளார்.