சென்னை தலைமை செயலகத்தில் 4வது முறையாக மருத்துவ நிபுணர் குழுவுடன் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குனர் பிரதீப் கவுர் பேட்டியளித்தார். அப்போது ஒரே நேரத்தில் ஊரடங்கை தளர்த்தினால் கொரோனா தொற்று அதிகரிக்கும், படிப்படியாக தான் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட வேண்டும் என முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளோம் என கூறியுள்ளார். ஊரடங்கை நீட்டிப்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை, என்றும் தொற்று ஒருவருக்கு உறுதியானால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர் குழு தகவல் அளித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது, தமிழகத்தில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் விகிதம் குறைவாகவே உள்ளது என அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து கவலைப்பட வேண்டாம், அதிகளவில் பரிசோதனை செய்வதால்தான் அதிக பாதிப்புகளை கண்டறிய முடிகிறது. பணியிடங்களில் தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.