தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு, கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, வடதமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஸியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 39.3 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக வரும் 14ம் தேதி, சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 15ம் தேதி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வரையிலும், அவ்வப்போது 65 கி.மீ வரை வீசக்கூடும்.
இதுதவிர அந்தமான், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ வரை வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து 16ம் தேதி, மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 55 முதல் 65 கி.மீ வரையிலும் அவ்வப்போது 75 கி.மீ வரையிலும் வீசக்கூடும். அன்றைய தினம் அந்தமான், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 வரை வீசக்கூடும் என் தெரிவித்துள்ளது. 17ம் தேதி மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடும் சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கி.மீ வரையிலும் அவ்வப்போது 85 கி.மீ வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, வருகிற 18ம் தேதி மத்திய மேற்கு மற்றும் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடும் சூறாவளி காற்று மணிக்கு 75 முதல் 85 கி.மீ வரையிலும், அவ்வப்போது 95 கி.மீ வரையிலும் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் வடக்கு ஆந்திர மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை வீசக்கூடும் என தெரிவித்துள்ளது. இதனால், கடல் கொந்தளிப்புடன் கானாடும்காணப்படும் என்பதன் காரணமாக மீனவர்கள் வருகிற 14ம் தேதி முதல் மேற்கண்ட பகுதிகளில் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.