குழந்தைகளுக்கு பரவும் புதிய வகை அலர்ஜி நோயினால் பெற்றோர் பெரிதும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்
உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் நிலையில் பிரிட்டனில் குழந்தைகளிடம் புதிய வகையான அலர்ஜி நோய் பரவி வருகின்றது. குழந்தைகளுக்கு சுவாச நோய் போன்று கடுமையான காய்ச்சலுடன் தோலில் சிவப்பு தடிப்புகள் ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது.
இந்த புதிய வகை நோய் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிப்பதுடன் இந்த நோய்க்கு பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகின்றது. இதுவரை பிரிட்டனில் நூறு குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஏப்ரல் மாதமே இந்த நோய் குறித்து எச்சரிக்கை கொடுக்கப்பட்ட நிலையில் 14 வயது சிறுவன் ஒருவன் இந்நோய்க்கு பலியாகியுள்ளான். அதிக காய்ச்சல், உடல்வலி, சிவந்த கண்கள், சொறி, வீக்கம் போன்றவை இந்த புதிய வகை நோயின் அறிகுறிகள்.
லண்டனில் மட்டும் இதுவரை எட்டு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதயத்துடிப்பு மற்றும் ரத்த ஓட்டத்தை சீர் படுத்துவதற்காக குழந்தைகள் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் மட்டுமல்லாது அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிலும் இந்த நோய் பரவி வருவது மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.