இந்தியாவில் 82 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,970 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 52வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இந்த நிலையில் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி ஊரடங்கு 4.0 குறித்து மே 18ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 27,524 பேரும், தமிழகத்தில் 9,674 பேரும், குஜராத்தில் 9,591 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து டெல்லியில் 8,470 பேரும், ராஜஸ்தானில் 4,534 பேரும், மத்திய பிரதேசத்தில் 4,426 பேரும், உத்தரபிரதேசத்தில் 3,902 பேருக்கும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்புகளின் பட்டியலில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது.
மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,649 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,019 பேரும், குஜராத்தில் 586 பேரும், மத்திய பிரதேசத்தில் 237 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மேலும் மேற்குவங்கத்தில் 215 பேர் கொரோனாவால் இதுவரை பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 27,920 ஆக அதிகரித்துள்ளது.