தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 6ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தமிழக அரசு அறிவித்தபடி சென்னையை தவிர 7ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. மே 7 மற்றும் 8ம் தேதி கடைகள் திறந்திருந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் ரூ.294 கோடிக்கு மது விற்பனையாகிருந்தது. இந்த சூழவில் சமூக இடைவெளி பின்பற்றாததால் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் டாஸ்மாக் கடை திறப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது. மேலும் உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.