தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. காணொளி மூலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி எதிர்தரப்பில் சபரீசன் உள்ளிட்ட முக்கியமான வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர்.
தமிழக அரசு சார்பில் முக்கியமான வாதங்கள் வைக்கப்பட்டிருந்தது. மதுக்கடைகளை மூடுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்பது பிரதானமாக வைக்கப்பட்டது. ஆன்லைனில் மது விற்பனை செய்து முடியாது என்றும், அவ்வாறு செய்தால் மது கடத்தல் என்பது அதிகரித்துவிடும் என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. அதே போல ஆன்லைன் மூலமாக மதுவிற்பனை முடியாது என தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக கூறப்பட்டது.
எதிர் மனுதாரர்கள் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டதில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் மதுவிற்பனை தொடர்பாக நாங்கள் யோசிக்கிறோம் என்றுதான் தமிழக அரசு சொல்லி இருந்தது, ஆனால் இப்போது ஆன்லைன் மதுவிற்பனை முடியாது என அவர்கள் இரட்டை நிலைப்பாடு எடுக்கிறார்கள். இதுதான் பெரிய பிரச்சனையை ஏற்படுத்துகின்றது.
நாங்கள் ரூபாய் நோட்டுகளை நேரடியாக கையாளாமல் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனையை செய்கின்றோம். ஆதார் கட்டாயம் என்பதை வைத்துள்ளோம். ஒரு நாளைக்கு இவ்வளவு தான் மது விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்கும் நாங்கள் வைத்திருக்கின்றோம். கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினரை முழுமையாக ஈடுபடுத்தி இருக்கின்றோம் என்று பல்வேறு விவாதங்கள் வைக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம் மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது.
— Kamal Haasan (@ikamalhaasan) May 15, 2020