பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களுக்கு வட்டி மானியம் 2 சதவீதம் அளிக்கும் திட்டத்தை நிதியமைச்சர் அறிவித்துள்ளார். பிரதமரின் 20 லட்சம் கோடி சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற உள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன.
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, “பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களுக்கு வட்டி மானியம் 2 சதவீதம் அளிக்கும் திட்டத்தை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்துள்ளார். முறையாக கடனை திருப்பி செலுத்துவோருக்கு கூடுதலாக 2 % வட்டி மானியம் வழங்கப்படும் என கூறியுள்ளார். இதனால் 2 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில், 5000 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் பணப்புழக்கம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய மத்திய அமைச்சர், ஊரடங்கின் போது பாலின் தேவை 20 முதல் 25 % வரை உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார். தினமும் 360 லட்சம் லிட்டர் பால் தேவை என்கிற நிலையில் ஊரடங்கின் போது தினமும் 560 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார். கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்ட பால் சுமார் ரூ.4,100 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
பால் வளத்துறையில் தனியார் முதலீடுகள்:
பால் வளத்துறையில் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகள் உருவாக்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பால் மூலமான மதிப்பு கூட்டு பொருட்கள் சார் தொழிலிலும் தனியார் முதலீடுகள் ஈர்க்கப்படும் என அவர் கூறியுள்ளார். பால் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.