10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இ-பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், வெளியூரில் உள்ள மாணவர்கள், தேர்வு மையங்களுக்கு வர இ-பாஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார். தனியார் பள்ளி மாணவர்களை 3 நாட்களுக்கு முன்பே அழைத்து வந்து விடுதியில் தங்க வைத்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். அரசு பள்ளி தேர்வு மையங்களில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தபடுவார்கள் எனக் கூறியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 10ம் தேதி நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில், 10ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. 10 ம் வகுப்பு பொது தேர்வை ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறையில் பணி புரியும் அனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்குவது குறித்து 18-ம் தேதி முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாணவர்கள் அவரவர் மையங்களில் தேர்வு எழுதலாம் என்றும், இதற்காக 3,087 தேர்வு மையங்கள் உள்ளன. கூடுதலாக 5000 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 8,087 தேர்வு மையங்கள் அமைக்கப்படுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.