புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை எனது இதயத்தை நொறுங்க வைப்பதாக உள்ளது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் வீடியோ கான்பரென்ஸ் மூலம் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, ” ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு நேரடியாக பண உதவி வழங்கவேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நிதி உதவியை எதிர்பார்க்கின்றனர்; கடன்களை கோரவில்லை என விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் பேசிய அவர், எனது பரிந்துரைகளை அரசாங்கம் பரிசீலிக்கும் என்று நான் நம்புகிறேன். பலருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் நிவாரண உதவித்தொகையை மக்களின் கைகளில் கொடுப்பதுதான் சரியான விஷயமாக தோன்றுகிறது. இந்த பரிந்துரைகளைப் பற்றி பிரதமர் மோடி தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.
மேலும், நேரடி வங்கி பரிமாற்றம், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாட்களுக்கு நீட்டிப்பது மற்றும் விவசாயிகளுக்கு நேரடியாக பணம் வழங்குவதை பரிசீலிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். மக்களின் வாழ்வாதாரத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் ஊரடங்கை நீட்டிப்பது தவிர்த்து வேறு வழியில்லை என தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் பொருளாதாரத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும், ஆபத்தில் இருப்பவர்களை கவனித்துக் கொள்ள சரியான திட்டமிடல் இருக்க வேண்டும் எனக்கூறியுள்ளார். மேலும் அவர் விடுத்துள்ள வேண்டுகோள்கள் யாதெனில், ” குறுகிய காலத்தில், சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை பாதுகாக்கவும். நடுத்தர காலத்தில், இந்த வணிகங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு தெளிவான கொள்கை இருக்க வேண்டும்.
நாட்டின் பொருளாதாரம் புயலை போன்று சேதத்தை சந்தித்து கொண்டிருக்கிறது. இதை நான் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறேன். அதுதான் எதிர்க்கட்சியின் வேலை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்தோருக்கு உதவுவதும், பணத்தை நேரடியாக அவர்களின் பைகளில் வைப்பதும் தான் அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் நம் அனைவரின் கடமையாகும்” என கூறியுள்ளார்.