தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது சற்று ஆறுதல் அளிக்கின்றது.
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் கடந்த 2 மாதங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நாளையோடு நிறைவடைய இருக்கும் நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கும் தொடரும் என அண்மையில் பிரதமர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதற்கான தளர்வுகள் குறித்து மத்திய அரசு நாளைய தினம் அறிவிக்க இருக்கின்றது.
இந்தியாவில் கொரோனா தாக்கம்:
இதனிடையே ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு சென்று கொண்டு இருக்கின்றது. இந்தியாவை பொருத்தவரை ஊரடங்கு 50 நாட்களை கடந்தும் கொரோனாவின் தாக்கம் குறையாமல், அதன் பாதிப்பு சீனாவை மிஞ்சி இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 86, 614 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 2,760 பேர் உயிரிழந்து 53,063 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மகாராஷ்டிரா முதலிடம்:
சீனாவை மொத்த பாதிப்பில் இந்தியா மிஞ்சி இருந்தாலும் இறப்பு விதத்தில் மிகவும் அற்புதமாக இந்தியா செயல்பட்டுள்ளது. சீனா மட்டுமல்ல மற்ற பல நாடுகளை மிஞ்சும் அளவிற்கு இந்தியாவின் குணமடைந்தோர் விகிதம் இருக்கின்றது. இது மக்களுக்கு ஆறுதலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது . அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 29,100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 6,564 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகம் சூப்பர்:
குஜராத்தில் 9,932 பேர் பாதிக்கப்பட்டதில் 4,035 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் 9,333 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 3926 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 3,538 பேரை குணமடையச் செய்து 4ஆவது இடத்தில் தமிழகம் இருக்கின்றது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 939 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது தமிழக சுகாதாரத்துறையின் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
புள்ளி விவரம் சொல்லுவது என்ன?
அதிகமானோரை குணப்படுத்திய மாநிலங்களில் வரிசையில் தமிழகம் 4ஆவது இடத்தில் இருந்தாலும் ஒரே நாளில் அதிகமானோரை குணப்படுத்தியதில் எந்த மாநிலத்திலமும் தொடாத எண்ணிக்கையை தமிழகம் பெற்றுள்ளது. அதிகமானோரை குணப்படுத்திய மாநிலமான மகாராஷ்டிரா கடந்த 11ஆம் தேதி ஒரே நாளில் 587 பேரை குணமடைய செய்த்தது. குஜராதில் 12ஆம் தேதி 466 பேரும், டெல்லியில் 16ஆம் தேதி 473 பேரும் குணமடைந்துள்ளார். ஒரே நாளில் அதிகபட்சமாக நேற்று 359 பேர் குணமடைந்த நிலையில் இன்று ஒரே நாளில் 939 பேர் குணமடைந்துள்ளார்.