தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10,585ஆக உயர்ந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே அச்சம் அடைய வைத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 10, 585 ஆக உயர்ந்துள்ளது. 74 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 3 ஆயிரத்து 538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் 6,973 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக தலைநகர் சென்னை விளங்குகிறது. இங்கு மட்டும் 6279 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
கோயம்பேடு மூலம் அதிக பாதிப்பு:
சென்னையிலுள்ள கோயம்பேடு சந்தை மூலமாக அதிகப்படியான மாவட்டங்களுக்கு தொற்று பரவியது மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. குறிப்பாக திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களே சென்னைக்கு அடுத்தடுத்த இடங்களில் நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக இருக்கும் இந்த 5 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட காரணமே கோயம்பேடு காய்கறி சந்தை தான்.
இந்தியாவில் 4ம் இடம்:
கொரோனா பரவிய காலம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றோடு மூன்றாம் கட்ட ஊரடங்கு நிறைவடைய இருக்கிறது. ஏறக்குறைய 50 நாட்கள் கடந்தும் கொரோனாவின் வீரியம் குறையாதது மக்களுக்கு பீதியை கிளப்பியுள்ளது. அதே சமயத்தில் இந்தியாவில் அதிகமானோரை குணமடையச் செய்த மாநிலம் வரிசையில் தமிழகம் நான்காவது இடத்தில் இருப்பது மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகின்றது.
கொரோனவை வெற்ற தமிழகம்:
கொரோனா பரவிய காலம் முதல் தமிழக அரசு அதனை சிறப்பாக கையாண்டது. நாட்டிலே அதிகமான பரிசோதனை மையங்கள், அதிகமான சோதனைகள், குறைந்த உயிரிழப்பு விகிதம் என அசத்திய தமிழக அரசை மத்திய சுகாதாரத்துறை, மத்திய அரசாங்கமும் புகழ்ந்து தள்ளியது. இது ஆளும் அதிமுகவை தொடர்ந்து வீறு நடை போடச் செய்தது. எதிர்க்கட்சிகள் ஏராளமான விமர்சனங்களை முன்வைத்தும் கூட எதற்கும் அசராமல் அரசு கொரோனவை வென்று கொண்டே இருந்தது.
எதிர்க்கட்சி ஆயுதம்:
இப்படி தொடர் விமர்சனங்களை புறம் தள்ளி சென்று கொண்டு இருந்த அரசின் மீது கோயம்பேடு சந்தை மூலமாக கொரோனா அதிகமாக பரவியதை எதிர்க்கட்சியினர் விமர்சித்து அரசியல் செய்தனர். அதுமட்டுமல்லாமல் கொரோனா அதிகமாக பரவிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் வரை சென்று தமிழக அரசு அனுமதி பெற்றது ஆளும் அரசுக்கு எதிரான ஒரு அரசியல் ஆயுதமாக எதிர்கட்சினருக்கு கிடைத்தது.
பஞ்சமற்ற அரசியல்:
குறிப்பாக எதிர்க்கட்சியான திமுக கொரோனா காலகட்டத்தில் பல்வேறு மட்டங்களில் அதிமுகவை விமர்சனம் செய்தது. அதிமுக எடுக்கும் நடவடிக்கைகளையும் இது சரியில்லை, அது சரியில்லை என்றெல்லாம் அறிக்கை விட்டது. ரேபிட் டெஸ்ட் கிட் அதிக விலைக்கு வாங்கி விட்டது, உண்மையான விலை என்ன ? ஊழல் நடந்து விட்டது என சரமாரியான விமர்சனங்கள் அதிமுகவை அசைத்து பார்த்தது. மத்திய அரசு கொண்டு வந்த மின்சார திருத்தச் சட்டம், பத்தாம் வகுப்பு தேர்வு என திமுக அரசியல் செய்ததற்கு பஞ்சமே இல்லை.
புலம்பிய அதிமுக:
மதுக்கடைகளுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சியினர் மாநிலம் முழுவதும் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் நடத்தின. நேற்று கூட மாவட்ட செயலாளர்களுடன் காணொளி காட்சிகளின் மூலம் ஆலோசனை நடத்திய திமுக தலைவர் மு க ஸ்டாலின் அதிமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இப்படி தொடர்ந்து எதையாவது சொல்லி அரசை விமர்சித்து வந்தது ஆளும் தரப்புக்கும் கடும் மனவேதனையை உண்டாக்கியது. இவர் இந்த காலத்திலும் இப்படி அரசியல் செய்கிறாரே என்று புலம்ப ஆரம்பித்தனர்.
அட்டகாசமான சாதனை:
திமுகவின் அரசியல் ஆட்டம் இப்படி இருக்க ஒட்டுமொத்த விமர்சனங்களையும் ஒரே நாளில் ஆளும் தரப்பு தும்சம் செய்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 939 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது தமிழக அரசின் மீதும், தமிழக சுகாதாரத்துறையின் மீதும் மிகப் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் ஒரே நாளில் இவ்வளவு எண்ணிக்கையில் குணமடைந்து வீடு திரும்பியது இல்லை. மகராஷ்டிரா மாநிலத்தில் கூட மே 11ஆம் தேதி 587 பேர் தான் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.
புலம்பவிட்ட அதிமுக:
இது ஆளும் அரசின் மகத்தான சாதனையாகவும், தமிழக சுகாதாரத் துறைக்கு கிடைத்த நற்சான்றிதழாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் திமுக அதிமுக மீது வைத்த ஒட்டுமொத்த விமர்சனங்களும் தூள் தூளாகியுள்ளது. ஒரே நாளில் அனைத்து விமர்சனங்களையும் தூசி தட்டி முடிவுக்கு வந்ததால் எதிர்க்கட்சியான திமுகவுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொடங்கிய காலத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று தொடங்கியது முதல் நேற்று நடந்த மாவட்ட செயலாளர் கூட்டம் வரை ஏறக்குறைய 50 நாட்களுக்கும் மேலாக அதிமுக மீது ஏராளமான விமர்சனங்கள் திமுக வைத்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் அரசின் நடவடிக்கை திமுகவை புலம்ப விட்டுள்ளது.
ஷாக் ஆன தளபதி:
இந்த காலகட்டத்தில் ”ஒன்றிணைவோம் வா” என்ற திமுகவின் அரசியல் ஆட்டத்திற்கு தமிழக அரசு கொடுக்காது என்று உணர்த்தும் வகையில் தமிழக சுகாதாரத்துறை பறைசாற்றி உள்ளது திமுகவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒரே நாளில் கிட்டத்தட்ட ஆயிரம் என்ற எண்ணிக்கையில் குணமடைய செய்த தமிழக அரசின் சுகாதாரத்துறை நடவடிக்கையால் மீதம் இருப்பவர்கள் விரைவில் குணப்படுத்த முடியும் என்று ஆளும் அதிமுக அரசு மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்பட்டுள்ளதால் திமுக தலைவர் ஷாக் ஆகியுள்ளார்.