ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவை அடுத்த 2 மாதங்ளுக்கும் இலவசமாக வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து 5ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில், சுய சார்பு பாரதம் திட்டத்தை வலுப்படுத்த திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்றும் சரக்குகளை கையாளுவதில் உள்ள சிரமங்களை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நிலம், தொழிலாளர், பண கையிருப்பு, சட்டம் உள்ளிட்ட 4 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தி உள்ளோம் என கூறிய அவர்,
பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் ஏழைகள் நேரடியாக பயன்பெற முடியும் என தகவல் அளித்துள்ளார். ஏழைகள் மற்றும் பசியால் இருப்பவர்களுக்கு தற்போது உணவளிக்க வேண்டியது நமது கடமை. தொழிலாளர்களுக்கு போக்குவரத்து சவாலை எதிர்கொண்டு உணவு தானியம் வழங்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டுகளுக்கு உணவு, தானியம் மற்றும் பருப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவை அடுத்த 2 மாதங்ளுக்கும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மே 16ம் தேதி வரை 8.19 கோடி விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.2 ஆயிரம் செலுத்தி உள்ளோம். 2 கோடியே 20 லட்சம் தொழிலாளர்களுக்கு இதுவரை ரூ. 3,950 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் கூறியுள்ளார்.