தமிழகத்தில் அமலில் இருக்கும் பொது முடக்கத்தை சில தளர்வுகள் உடன் மே 31ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொது முடக்கம் 31ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வரை முறைகளுடன் இருக்கும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடைமுறையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கான தடைகள் மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபட, அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்தவும் தடை நீடிக்கிறது.
திரையரங்குகள்,கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை ,சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், பெரிய அரங்குகள் கூட்டங்களுக்கு தடை தொடரும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள், ஊர்வலங்கள் தடை தொடரும்.
பொதுமக்களுக்கான விமானம், ரயில், பொது போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து, சென்னை மாநகரில் இருந்து பிற பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்து ஆகியவற்றுக்கு அனுமதி கிடையாது. மத்திய மாநில அரசின் சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமானம், ரயில், பொது போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும்.
டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா, மெட்ரோ ரயில், மின்சார ரயில், பணியாளர் விடுதிகள், தவிர மற்றும் தங்கும் விடுதிகள், தங்கும் ஹோட்டல், ரிசார்ட் ஆகியவற்றுக்கான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது என்றும், திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போது இருக்கும் நடைமுறைகள் தொடரும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.