இந்தியாவில் 96 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 5,242 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 157 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 55வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன.
உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 11ம் இடத்தில் உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96,169 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 33,053 பேரும், குஜராத்தில் 11,379 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் 11,224 பேரும், டெல்லியில் 10,054 பேரும், ராஜஸ்தானில் 5,202 பேரும், மத்திய பிரதேசத்தில் 4,977 பேரும், உத்தரபிரதேசத்தில் 4,259 பேருக்கும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,029 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,198 பேரும், குஜராத்தில் 695 பேரும், மத்திய பிரதேசத்தில் 248 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதேபோல மேற்குவங்க மாநிலத்தில் 238 பேரும், ராஜஸ்தானில் 131 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 36,824 ஆக அதிகரித்துள்ளது.