சென்னையில் அத்தியாவசிய பணிகளுக்காக 200 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 4ம் கட்டமாக ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழக அரசும் ஊரடங்கை மே 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. அதில், சுமார் 25 மாவட்டங்களுக்கு சில புதிய தளர்வுகளை அறிவித்தது. அதில், மாவட்டங்களுக்குள் மட்டும் பயணம் மேற்கொள்ள பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல, 25 மாவட்டங்களில் 100 பேருக்கு குறைவாக உள்ள தொழில் நிறுவனங்களில் 100% ஊழியர்களை கொண்டு பணி தொடங்கலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்கில் முன்பு இருந்த கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் அத்தியாவசிய பணிகளுக்காக 200 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரப்பணி மற்றும் 50% ஊழியர்களுக்காக சென்னையில் 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அரசு ஊழியர்களுக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், தலைமைச்செயலகத்திற்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 25 பேருந்துகளுடன் கூடுதலாக 25 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.