தேவைப்பட்டால் ஊரடங்கை மாநில அரசுகள் மேலும் கடுமையாக்கி கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில், ஊரடங்கு வழிகாட்டுதல்களை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்கக் கூடாது எனவும் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. நேற்று இரவோடு 3ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், மே 31 ம் தேதி வரை மேலும் ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.
மேலும் 4-ம் கட்ட ஊரடங்கிற்கான வழிகாட்டுநெறிமுறைகளை மத்திய அரசின் உள் துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில், ” பொது இடங்களிலும் பணி இடங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயம். ஹோட்டல்கள் மது பான கூடங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு அரங்கை திறக்க அனுமதிக்கப்படுகிறது.
திருமண விழாக்களில் அதிகபட்சம் 50 பேர் வரையில் பங்கேற்கலாம். இறுதி சடங்கில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆரஞ்சு, சிகப்பு மண்டலங்கள் எவை என்பதை மாநில அரசுகள் முடிவெடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், மாநில அரசுகள் விருப்பப்பட்டால் ஊரடங்கை கடுமையாகிக்கொள்ளலாம் என கடிதம் அனுப்பியுள்ளது.