Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் சங்கம் மனுதாக்கல்!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரி ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து வசதி இல்லாததால் பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்றத்தில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தலைவர் மாயவன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் வரும் ஜூன் 1ம் தேதியில் இருந்து ஜூன் 12ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும், அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் தேர்வு எழுத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வர இ-பாஸ் முறை மூலம் அழைத்து வரப்படுவாரகள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தனியார் பள்ளி மாணவர்களை 3 நாட்களுக்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 4ம் கட்டமாக நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? என கேள்வி எழுந்தன. மேலும் இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.

இதையடுத்து, தேர்வு நடைபெறுவதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஏற்கனவே ஸ்டாலின் ராஜா என்பவர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். சமூக இடைவெளியை பின்பற்றுவார்களா? என்பது சந்தேகம். போக்குவரத்து வசதியும் இல்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆசிரியர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில்,” தேர்வு நடத்தினால் கட்டாயம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். ஒருமாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லை. எனவே இந்த சிரமத்தை தவிர்க்க தேர்வை தள்ளிவைக்கவேண்டும்” என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். ஜூலை மாதம் நடைபெற உள்ள சிபிஎஸ்சி தேர்வுகளோடு இந்த தேர்வையும் நடத்தலாம் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை அல்லது நாளை மறுதினம் விசாரணைக்கு வர உள்ளது.

Categories

Tech |