நாட்டில் கொரோனா தொற்று பரிசோதனையை மேலும் விரிவுபடுத்த மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
பரிசோதனை குறித்து மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநில அரசுகளுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், ” கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியருக்கு கட்டாயம் பரிசோதனை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. அதேபோல தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனையை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களில் நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு கட்டாயம் பரிசோதனை செய்ய வலியுறுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நோய் அறிகுறி இருந்தால் பரிசோதனை நடத்த வேண்டும். கொரோனா பரவல் அதிகமுள்ள இடங்களில் காய்ச்சல், இருமல் உள்ளவர்களுக்கு சோதனை அவசியம் வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டதால் பரிசோதனையை விரிவுபடுத்த மத்திய சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது.