கேரளாவில் இன்று மேலும் 12 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தாவது, ” இன்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்துள்ளனர். மேலும் 8 பேர் பல்வேறு மாநிலங்களிலிருந்து கேரளாவுக்கு திரும்பியவர்கள் ஆவர். இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 642 ஆக பதிவாகியுள்ளது. இதில் தற்போது 142 பேர் சிகிச்சை பெற்று வருவதாக முதல்வர் பினராயி விஜயன்” தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அனுமதியின்படி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிமாடுகளில் இருந்து கேரளா மக்கள் சொந்த ஊருக்கு அழைத்துவரப்படுகின்றனர். இதனால் கேரளாவில் கடந்த ஒரு வாரகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று கேரளாவில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. நேற்றுவரை மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 630 ஆக உள்ளது.
சிகிச்சையில் 130 பேர் உள்ளதாக முதல்வர் பினாரயி விஜயன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களில் 496 பேர் குணமடைந்த நிலையில், 4 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.