சென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,22ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 7,672 ஆக இருந்த நிலையில், இன்று 8000க்கும் மேல் அதிகரித்துள்ளது.
சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,423 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கம் – 1,137 பேரும், திரு.வி.க நகரில் – 900 பேர், தேனாம்பேட்டை – 822, தண்டையார் பேட்டை – 723, வளசரவாக்கம் – 544 பேரும் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி உட்பட 5 பேர் இன்று கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே சென்னையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக ராயபுரம், திரு.வி.க. நகர், கோடம்பாக்கம் மண்டலங்களில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பரிசோதனைகளை மேற்கொள்ள கூடுதலாக 500 சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.