சென்னையில் கொரோனா பரவலை தடுக்க புதிய திட்டம் அமல்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி “நம்ம சென்னை கொரோனா விரட்டும்” திட்டத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார். கரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் வீடு வீடாகச் சென்று அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிந்து பரிசோதனை செய்யும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது . அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு கட்டாயம் அவசியம். நோய் தொற்றை குறைக்க தேவையான நடவடிக்கைகள் அமலில் உள்ளது என கூறியுள்ளார்.
சென்னையில் அதிகம் பாதித்த பகுதிகளில் மைக்ரோ திட்டத்தின் கீழ் கொரோனா தொற்று தடுப்பு திட்டம் செயல்படுத்த உள்ளோம் என தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட மண்டலங்களில் உள்ள மக்களுக்கு லேசான அறிகுறி இருந்தாலும் பரிசோதனை நடத்தப்படும். வீட்டிற்கு வீடு சென்று பரிசோதனை நடத்துவதன் மூலம் கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா என சோதனை செய்கிறோம் என தகவல் அளித்துள்ளார்.
மேலும் ஜின்க், விட்டமின் மாத்திரைகள், மாஸ்க், கபசுரக்குடிநீர் இலவசமாக விநியோகம் செய்யப்படுகிறது என கூறிய அவர், இதுவரை 5.5 லட்சம் கபசுர குடிநீர் பாக்கெட், வைட்டமின் மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கொரோனாவைத் தடுக்க சென்னையில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. தொற்று பரவும் வாய்ப்புள்ள பகுதிகளில் சாதாரண காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக பரிசோதிக்கப்படும் . இதற்கென கூடுதலாக 500 சுகாதார ஆய்வாளர்கள் களப்பணியில் இருப்பார்கள் என அமைசர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார்.