ஆம்பன் புயல் கரையை கடக்கும் போது மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். மேலும் காற்றின் வேகம் கூடும் என்பதால் மீனவர்கள், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் சூறாவளி வீசும் என்பதால், மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்சியசாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரப்பதத்தை ஆம்பன் புயல் எடுத்து கொள்வதால் வெப்பம் இயல்பை விட அதிகரிக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல் அளித்துள்ளார். இதனிடையே அதி தீவிர புயலாக உள்ள ஆம்பன் புயல் வடக்கு-வடகிழக்கு திசையில் மணிக்கு 27 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
ஆம்பன் புயல் மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே கரையை கடக்க தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா இடையே சந்தர்வன் வனப்பகுதியை ஒட்டி புயலில் முகப்பு பகுதி கரையை கடக்க தொடங்கியுள்ளது. இன்று 4 மணி அளவில் கரையை கடக்க தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.