உலகின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள் கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி பல லட்சம் மரங்கள் வெட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனை பயன்படுத்திக்கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளை வேகமாக அழிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் அமேசான் காடுகளை அளிப்பது 64% அளவுக்கு அதிகரித்துள்ளதாக பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 529 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த காடுகளில் வாழும் 9 லட்சம் பூர்வகுடி மக்கள் மற்றும் இயற்கை சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா ஊரடங்கால் உலகளவில் காட்டில் மாசு கலப்பது வெகுவாக குறைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டை ஒப்பிடும்போது காற்றில் மாசு கலப்பது 17% குறைவாகும். உலகம் முழுவதும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்காததே இதற்கு காரணம். இந்த ஆண்டு இறுதியில் பசுமை குடில் வாயு குறைந்தது 4% அளவுக்காவது குறையும் என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.