ஈரோடு மாவட்டத்தில் 35 நாட்களாக கொரோனா தொற்று இல்லை என மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறியுள்ளார்.
வெளிமாநிலங்களை சேர்ந்த 1,500 பேருக்கும் பரிசோதனை செய்ததில் கொரோனா இல்லை என்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த 3,267 பேருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகே அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,895 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றது.
கோவை, தருமபுரி,நாகை, நீலகிரி உள்ளிட மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை 70 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 69 பேர் ஏற்கனவே குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கடந்த 35 நாட்களாக புதிதாக யாரும் பாதிக்கவில்லை என்பதால் ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.