இன்று காலை 10 மணிக்கு சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்குகின்றது என மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது .
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அனைத்து சேவைகளும் முடங்கியுள்ளன. நான்காம் கட்ட ஊரடங்கு வருகின்ற மே 31ம் தேதி முதல் நிறைய இருக்கிறது. இதனிடையே பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. போக்குவரத்து சேவை, ரயில் சேவை, விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்தன. பிற நாடுளில் உள்ள இந்தியர்களை மீட்பதற்கு சிறப்பு விமானங்களும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதேபோல சாலை போக்குவரத்து சேவையை மாநிலங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இதனிடையே தான் மத்திய ரயில்வே துறை அமைச்சர் ஜூன் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்தார். ஏசி இல்லாத இந்த சிறப்பு ரயில்கள் வழக்கமான கால அட்டவணையில் இயக்கப்படும் என்றும், இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் எனவும், இதனால் புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது மாநிலங்களுக்கு செல்ல ஏதுவாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து நேற்று ரயில்வே துறை இதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கான சிறப்பு ரயில் இடம்பெறவில்லை மற்றும் இன்று காலை 10 மணி முதல் இதற்கான முன்பதிவு தொடங்கும் என்றும் மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.