தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாநகராட்சியில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கான நவீன வாகனம் தொடக்கபட்டது. அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அவரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கொரோனா நிவாரண நிதியாக 1 கோடி வழங்கப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேவி ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது,
பத்தாம் வகுப்பு தேர்வுகள் நெருங்கிக்கொண்டு இருப்பதால் அதற்கான ஆயத்தப் பணிகளை நாங்கள் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த சூழ்நிலையில் என்ன நடவடிக்கை எடுத்தால் மாணவர்களுக்கு தேர்வு எழுத எளிதாக இருக்கும், என்பதையும் தெரிந்து அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு முதலமைச்சருடன் பேசினோம். பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டு இருக்கிறது, மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை தமிழக முதலமைச்சர் எடுத்து வருகிறார்கள்.
பிற மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, பல்வேறு மாநிலங்களில் தேர்வு முடிந்து விடைத்தாள் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கிறார்கள். சில மாநிலங்கள் அடுத்த வாரம் துவங்க இருக்கிறது. 15ஆம் தேதிக்கு என்னென்ன நடவடிக்கையை எடுக்க வேண்டுமோ அதனை அரசு எடுத்து வருகின்றது. மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கின்ற வகையில்நடவடிக்கை மேற்கொள்வதற்கான அறிவிப்பை வெளியிட இருக்கின்றோம்.
மத்திய அரசு ரயில் சேவையை தொடங்கி இருக்கிறது, உள்நாட்டு விமான சேவையை ஜூன் 1ஆம் தேதி முதல் தொடங்க இருக்கின்றார்கள். இதனையெல்லாம் கணக்கில் எடுத்து தான் தேர்வு நடத்தப்படுகின்றது. தேர்வு மையங்களை பொருத்தவரை இன்று கூடுதலாக தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முதலில் 3, 684 தேர்வு மையம் அமைக்கப்பட்டது, தற்போது 12 ஆயிரத்து 674தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டு, மூன்று மடங்கு கூடுதலாக தேர்வு உருவாக்கப்பட்டிருக்கிறது, அந்தந்த பள்ளியிலே மாணவர்கள் தேர்வை எழுதலாம் என்று அமைச்சர் தெரிவித்தார்.