கொரோனா முடிந்த பின்னரே செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
மேலும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் முடிவு எடுக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார். இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து தெளிவான விவரம் கிடைத்தால் மட்டுமே தமிழக அரசு முடிவெடுக்க முடியும் எனவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசின் கால அவகாசத்தை பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
சென்னையில் அண்ணா பல்கலை கழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள 10 உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஐஓஇ என்ற சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் தற்போது நடைமுறையில் இருக்கும் 69% இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு முறையான பதில் வழங்காததால், தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை.
இது தொடர்பாக, நேற்று தலைமை செயலகத்தில் சென்னை பல்கலை.-க்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து முதல்வருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செமஸ்டர் தேர்வு தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. அதில், கொரோனாவுக்கு பின்னர் தான் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் எனவும், மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 27ம் தேதியோடு சென்னை பல்கலை துணைவேந்தர் ஓய்வு பெறுவதால், பல்கலைக்கழகத்தின் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.