Categories
தேசிய செய்திகள்

ஆம்பன் புயலால் மேற்குவங்கத்தில் இதுவரை 72 பேர் உயிரிழப்பு – முதல்வர் மம்தா பானர்ஜி!

ஆம்பன் புயலால் மேற்குவங்கத்தில் இதுவரை 72 பேர் உயிரிழப்பு என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த ஆம்பன் புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தின் இடையே, திஹா மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் இடையே நேற்று பிற்பகல் 3 மணிக்கு கரையைக் கடக்க தொடங்கியது. புயல் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து, சுமார் 7 மணியளவில் கரையை கடந்தது. இந்தப் புயலால் கொல்கத்தாவில் கடும் சூறாவளிக் காற்று வீசியது.

சுமார் 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் ஹுக்ளி, கொல்கத்தா, ஹவுரா ஆகிய பகுதிகள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒடிசாவில் கனமழையால் கடுமையாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆம்பன் புயலால் மேற்குவங்கத்தில் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர் என முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

ஆம்பன் புயலால் உயிரிழந்த 72 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். இதுபோன்ற பேரழிவை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை என தெரிவித்த அவர், கொரோனா பாதிப்பை விட ஆம்பன் புயல் பாதிப்பு தான் அதிகம் என தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்க மாநிலத்துக்கு வந்து, தற்போது உள்ள சேதங்களை நேரில் பார்வையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் மம்தா கூறியுள்ளார்.

Categories

Tech |