Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒதுக்காதீங்க ….! ”எங்களுடனும் வாழுங்கள்” ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை …!!

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளை ஒதுக்கி வைத்தால் முறையல்ல என்று மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகளை நியமித்து உள்ள அதிமுக அரசு அந்தப் பகுதி அமைச்சர்களோ, அல்லது மக்கள் பிரதிநிதிகளையோ குழுவில் இடம்பெறச் செய்யவில்லை.

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் சூழலில் அதிகாரிகளுடன் மக்கள் பிரதிநிதிகளையும் பயன்படுத்தினால்தான் சிறப்பாக இருக்கும். மக்கள் தங்கள் குறைகளை அவர்களிடம் நெருங்கி தயங்காமல் கூறுவதற்கான வாய்ப்பு உருவாகும். உடனடி கோரிக்கையை நிறைவேற்ற முடியும், நிவாரணங்களை விரிவுபடுத்த முடியும்.

அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கொண்ட கூட்டு முயற்சி ஒன்றே இதுபோன்ற நேரத்தில் கைகொடுக்கும்.

கொரோனாவோடு வாழப் பழகுவோம் என்று பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள நிலையில் தன் அமைச்சரவை சகாக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் நிர்வாக ரீதியாக வாழப் பழகிக் கொள்ள வில்லை.

உதாரணத்திற்கு மாநிலத்தில் முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டிருக்கும் குழுவிற்கு தொழில்துறை அமைச்சர் தலைமை வகித்திருக்க வேண்டும். அவர் உறுப்பினராக கூட இடம்பெறவில்லை.

மாநிலத்தில் நிதி நிலைமையை சீர்படுத்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு ரங்கராஜன் தலைமையில் உயர்நிலைக் குழுவில் நிதியமைச்சர் உறுப்பினராகக் கூட இடம்பெறவில்லை.

தடுப்பு நிபுணர் குழு, ஊரடங்கு தளர்வு குறித்து அறிவிக்கும் குழு எவற்றிலும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் கூட இடம்பெறவில்லை. அமைச்சரவைக்கே உரிய கூட்டுப் பொறுப்பு திட்டமிட்டுத்  தட்டிக்கழிக்கபடுவது, ஆபத்தான போக்கு.

எங்கெங்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் உள்ள மக்கள் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்று நான் கூறுவது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமல்ல, அதிமுகவில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும்.

கேரளாவில் மாநில அளவில் நகராட்சி, ஊராட்சி வார்டு வரை ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதை பார்த்து தமிழக முதல்வர் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்.

தனது அமைச்சரவை சகாக்களை கூட நம்பாமல் ஒதுக்கி வைத்து, தன்னை முன்னிலைப்படுத்தி முக்கியத்துவம் தேட முதல்வர் முயற்சி செய்வது, அதுவும் நெருக்கடி காலத்தில் செய்வது, பேரிடர் மேலாண்மைக்கு ஆக்கபூர்வமான அடையாளம் அல்ல. எனவே ஜனநாயக ரீதியாக கடமையையும் பொறுப்பையும் பரவலாக்கி, பகிர்ந்தளித்து பேரிடரை எதிர்கொள்வதே ஏற்றதாகும் என்று அந்த அறிக்கையில் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |