ஊரடங்கு உத்தரவால் வங்கி கடன்களுக்கான இஎம்ஐ சலுகை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
2 மாத ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய துறைகள் 6.5% வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்தியாவில் தொழிற்துறை உற்பத்தி மார்ச் மாதம் 17% குறைந்துள்ளது. மூலதனப் பொருட்களின் இறக்குமதி மார்ச் மாதம் 27% குறைந்துள்ளது. மின்சாரம் மற்றும் எரிப்பொருள் நுகர்வு இந்தியாவில் குறைந்துள்ளது.
2020 முதல் காலாண்டில் சர்வதேச வர்த்தகம் கணிசமாக சரிவடைந்துள்ளதாகவும், 11 ஆண்டுகள் இல்லதா அளவு தொழில்துறை உற்பத்தி குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மே 15 வரை அந்நிய செலவாணி கையிருப்பு 487 பில்லியன் டாலராக உள்ளது. இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு 9.2 பில்லியன் டாலராக உள்ளது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
ஜிடிபி சிறிதளவு கூட வளர்ச்சி ஏற்படும் சூழல் இந்த நிதியாண்டில் இல்லை. ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதிப்பிரச்னைகளை சரி செய்யவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என்று அவர் உறுதி அளித்துள்ளார். ரிசர்வ் வங்கி பணிகள் தொய்வடையாமல் இருக்க 200 அதிகாரிகள் பணியாற்றினர். ரெப்போ வட்டி விகிதம் 40 புள்ளிகள் குறைக்கப்பட்டு 4 சதவீதமாக உள்ளது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.