தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும், சிறப்பு அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில் தேர்தலை நடத்த சிறப்பு அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரை தனி அதிகாரியாக தமிழக வணிக வரித்துறை நியமித்தது. தனி அதிகாரியை நியமித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனி நிர்வாகியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், மாவட்டப் பதிவாளரான சேகர் பதவி உயர்வு பெற்று கடந்த ஜனவரி மாதம் பணி மாறுதல் ஆனதால், அந்தப் பதவிக்கு புதிய சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமித்து அரசாணை பிறப்பித்திருந்தது. மேலும், தயாரிப்பாளர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூன் 30ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், ஜூலை 30 ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சிறப்பு அதிகாரியான ஒய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், தேர்தல் காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், அதுகுறித்து சிறப்பு அதிகாரி அக்டோபர் 30 ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.