உலகைச் சூறையாடிவரும் கரோனா வைரஸ் எங்கு தோன்றியது என்பது குறித்து சுயாதீன விசாரணை மேற்கொள்ள இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் உலக சுகாதார அமைப்பிடம் கூட்டாகக் கோரிக்கைவைத்துள்ளன.
இந்த விவகாரம் சீனாவின் பொறுமையைச் சீண்டும்வகையில் உள்ளதால், சினமடைந்த அந்நாடு தனது ஆதிக்கத்தை மேலும் விரிவுபடுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. அதன்படி, சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் முழுவதும் ஏதோ தங்களுக்கே உரியது போன்று சொந்தம் கொண்டாடும் சீன ராணுவமும், அதன் கடற்படையும் இக்கடல் பகுதிகளில் தங்களுக்கென ஒரு விதியை அமைத்து அத்துமீறலில் ஈடுபட்டுவருகின்றன.
சீனாவின் அராஜகப்போக்கு
கடந்த சில வாரங்களாக கடற்பரப்பை ஆய்வுசெய்வதற்காகச் சீனாவால் அனுப்பப்பட்ட கப்பல் ஒன்று மலேசியாவின் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்குள் அத்துமீறி நுழைந்து, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ஒரு மீன்பிடிக் கப்பல் மீது மோதி அதை மூழ்கடித்துள்ளது.
மேலும், அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் போர்க்கப்பலை நோட்டமிட்டவாறு, பிலிப்பைன்ஸ் போர்க்கப்பலுக்கு மிக அருகில் சென்றுள்ளது.
இது போதாதென ஏப்ரல் 18ஆம் தேதி சர்ச்சைக்குரிய பார்செல், ஸ்பார்ட்லி தீவுகளைத் தங்கள் எல்லைக்குள்பட்டதென அறிவித்த சீனா, தென்சீனக் கடலில் 80 புவியியல்-ஆழ்கடல் பகுதிகளை தனது மொழிப் பெயரில் வெளியிட்டது.
மற்ற நாடுகளின் இறையாண்மையைப் பொருட்படுத்தாமல் அதிகார எல்லையை விரிவுபடுத்தும் வேலையின் முயற்சியே இது.
சீன கப்பல்படையின் பாதுகாப்புடன் வந்த ஹையாங் டிஸி 8 கப்பல், ஏப்ரல் 16ஆம் தேதி மலேசியாவின் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குள் ஏப்ரல் 16ஆம் தேதி அத்துமீறி நுழைந்தது.
கச்சா எண்ணெய் இருப்பதைக் கண்டுபிடிப்பதற்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள பிரிட்டனின் ஒரு துளையிடும் கப்பலுக்கு மிக அருகில் இது சென்றுள்ளது. மலேசியாவின் கச்சா எண்ணெய் தேடும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணமே இந்தச் செயலானது பார்க்கப்படுகிறது.
இதனூடே, சீனாவின் அத்துமீறலைக் கண்காணிக்க அமெரிக்க மூன்று போர்க்கப்பல்களைச் சம்பவ இடத்துக்கு அனுப்பியது.
இது குறித்து வியூக படிப்புக்கான சர்வதேச கல்வி நிறுவன செயல் இயக்குநர் டிம் ஹக்ஸ்லே கூறுகையில், “தெற்காசிய நாடுகளுக்குச் சொந்தமான பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் சீனா செயல்பட்டுவருகிறது. அதிபராக ஜி ஜின்பிங் 2012ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து இதுபோன்று செயல்களில் சீனா ஈடுபட்டுவருகிறது. ஆண்டுக்கு ஆண்டு அந்நாட்டின் அராஜகப்போக்கு அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது.
நீண்டகாலமாக நீடித்துவரும் இந்தப் போக்கையும், தெற்காசிய நாடுகளின் மீது செலுத்தும் அழுத்தத்தையும் சீனா, கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாகக் குறைத்துக் கொள்ளும் என நாம் தப்புக் கணக்குப் போடக் கூடாது.
வியூக ரீதியாகத் தென்சீனக் கடல் சீனாவுக்கு முக்கியமானது. ஆகையால் அதன் இலக்குகளை அடைய அந்நாடு தொடர்ந்து முயற்சி செய்யும்” என்றார்.
சீன அதிபராக மா செடோங் இருந்த காலம் தொட்டே சீனா பல்வேறு பேரிடர்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. இதில் ஜின்பிங்கின் ஆட்சிக்காலம் ஒன்றும் விதிவிலக்கல்ல.
இவ்விவகாரம் குறித்து சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐ.ஐ.எஸ்.எஸ். அகாதெமிக் நிறுவனம் கூறுகையில், “நீண்டகாலமாக நடைபெற்றுவருவது என்பதனால் சீனாவின் அத்துமீறல்களை தெற்காசிய நாடுகள் பொறுத்துக்கொள்ளவோ, பின்வாங்கவோ கூடாது. ஆகையால், ஆசியன் நாடுகள் தங்களின் நலன்களைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் அதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும்” எனத் தெரிவித்தது.
இந்தக் கருத்தை ஒப்புக்கொண்ட ஹக்ஸ்லே, “ஆசியன் நாடுகள் தாங்கள் எதிர்கொள்ளும் புவி அரசியல் சவால்களை, குறிப்பாகத் தென்சீனக் கடல் விஷயத்தில் கோட்டைவிட்டுள்ளதென்றே சொல்ல வேண்டும். ஆசியன் நாடுகளுக்கிடையே சரியான ஒத்துழைப்பு இல்லை என்பதே இதற்குக் காரணம்.
ஆசியன் நாடுகள் ஒன்றுபட்டு, ஒரே மனநிலையில் செயல்பட்டால்தான் தங்கள் நலன்களைச் சீனாவிடமிருந்து பாதுகாக்க முடியும்” என்றார்.
சீன அச்சுறுத்தல் :
ஹவாயில் உள்ள பாதுகாப்புப் படிப்புக்கான கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்துவரும் எலினா நூர், மலேசியாவைச் சேர்ந்த ‘சமூக முன்னேற்றத்திற்கான ஆராய்ச்சி நிறுவனம்’ சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட இணைய விரிவுரையில் பேசினார்.
அப்போது அவர், “தென்சீனக் கடலில் மற்ற நாடுகளைச் சீனா அச்சுறுத்திவருவது புதிதல்ல; ஆனால், சமீபகாலமாகச் அதன் அச்சுறுத்தல் அபரிமிதமாக இருந்துவருகிறது. குறிப்பாக மலேசியா சீனாவின் அத்துமீறல்களால் பெரும் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளது.
சீனா அரசு இந்தப் பெருந்தொற்றைப் பயன்படுத்திக் கொண்டு அண்டை நாடுகளை அச்சுறுத்தும் பணிகளை அதிகரித்துவருகிறது. பிரச்னைகளைச் சுமுகமாகத் தீர்ப்பதற்கான மனப்பக்குவத்தில் சீனா இல்லை என்பதை இந்த அச்சுறுத்தல்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
எப்படி ஒரு சிறுத்தை தனது இடத்தை விட்டுக்கொடுக்காதோ அதேபோல தென்சீனக் கடலை சீனா விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பதை உலகம் தற்போது கண்டுவருகிறது. கோவிட்-19 பெருந்தொற்று சீனாவின் ஆசைகளை நிறுத்துவதாகத் தெரியவில்லை. இது சீனாவின் உண்மை குணத்தை வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா :
தென்சீனக் கடலில் ஆசிய நாடுகளின் ஆதிக்கத்தைச் சமன்படுத்தப் பல்லாண்டு காலமாகச் செயல்பட்டுவரும் அதே அமெரிக்காதான் இந்தப் பிரச்னைக்கு வழிவகுக்கிறது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு சீனா ஆசியன் நாடுகளை தன் கைக்குள் போட்டுக்கொள்ள முயன்றுவருகிறது.
இது குறித்து ஹக்ஸ்லே கூறுகையில், “ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு முன்பிருந்ததைவிடக் கணிக்க முடியாத அரசாக மாறிவிட்டது. மாறாக, பொருளாதார ரீதியாக வெளிநாடுகளிடம் அதிக நிபந்தனை விதிக்கும் நாடாக உருவெடுத்துள்ளது.
இதன் காரணமாக, ஒப்பீட்டளவில் அமெரிக்காவின் சக்தி குறைந்துவருவதாக ஆசிய-பசிபிக், தெற்காசிய நாடுகள் கருதுகின்றன.
இந்தக் காரணிகள் அனைத்தும், அமெரிக்காவின் செல்வாக்கை குறைத்து, நம்பகத்தன்மையற்ற கூட்டாளியாக்கிவிட்டது.
முக்கிய புவி அரசியல் விவகாரங்களில் ஆசிய நாடுகள் பொதுவான நிலைப்பாட்டை எடுத்திருப்பது அந்நாடுகளுக்கே சவாலாகிவிடுகிறது” என்கிறார்.
சீனாவின் அராஜகப்போக்கை பிலிப்பைன்ஸுடன் சேர்ந்து மலேசியாவும் சமீபகாலமாக எதிர்த்துவருகின்றது. ஆகையால், கோவிட்-19 பேரிடருக்குப் பிறகு இந்நாடுகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
ஜேம்ஸ்டவுன் அறக்கட்டளைக்காகக் கட்டுரை எழுதியிருந்த அரசியல் வல்லுநரான பிரசாந்த் பரமேஸ்வரன், “தென்சீனக் கடல் விவகாரத்தில் மலேசியா பாரம்பரியமாக ‘Playing it Safe’ (பாதுகாப்பாகச் செயல்படுதல்) என்பதையே பின்பற்றிவருகிறது.
அதேபோல் ராஜதந்திர, பொருளாதார, சட்ட, பாதுகாப்பு முன்னெடுப்புகள் ஆகிய காரணிகளை ஒருசேரப் பயன்படுத்திவருகிறது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், தனது உரிமையை நிலைநாட்ட மலேசியா பாடுபடும் அதேவேளையில், சீனாவுடனான நட்புறவில் விரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாகச் சீனாவின் பிடிவாத குணத்தை உணர்ந்து தென்சீனக் கடல் பிரச்னையை எதிர்கொள்வது குறித்து தனது ராஜதந்திரங்களை மலேசியா மாற்றியமைத்து வருகிறது.
உதாரணமாக, லுகோனியா சோலாஸ் (Luconia Sholas) என்ற இடத்தில் சீனா அத்துமீறி நுழைந்தபோது மலேசியா வியட்நாமுடன் சேர்ந்து கூட்டாக அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
ஆனால், சீனாவைச் சமாளிக்க இதுமட்டும் போதாது. சீனாவுடன் ஒப்பிடுகையில் மலேசியாவின் இந்தக் கோவிட்-19 காலத்துக்கு ராணுவ பலம் மிகமிகச் சிறியதே.
தனது கடற்படை திறன்களில் உள்ள குறைபாடுகளை, சீனாவின் போக்கால் மலேசியா கூடுதலாக வெளிப்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
தென்சீனக் கடலில் கோவிட்-19 தாக்கம் :
“கோவிட்-19 இப்பிராந்தியத்தின் இக்கட்டான சூழலை உலகிற்கு உணர்த்தியுள்ளது. ஆனால் தெற்காசிய நாடுகள் மீதான அழுத்தத்தைச் சீனா குறைத்துக்கொள்ளவில்லை.
கோவிட்-19 பெருந்தொற்றில் மூழ்கியுள்ள ஆசிய நாடுகளின் நிலைமையை தனக்குச் சாதகமான வாய்ப்பாக நினைத்து, கப்பல்படை ஆதிக்கத்தை சீனா விரிவுபடுத்திக் கொள்ள முயன்றுவருகிறது” என ஹக்ஸ்லே கூறுகிறார்.