Categories
மாநில செய்திகள்

மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைப்படி தமிழக அரசு தளர்வுகளை அளித்து வருகிறது: முதல்வர் பழனிச்சாமி!

மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைப்படி தமிழக அரசு தளர்வுகளை அளித்து வருகிறது என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து குடிமராமத்து பணிகள் குறித்தும் சேலத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்குவதரும், சலூன் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் பின்பற்றியதால் கொரோனா இல்லாத மவடாக சேலம் மாறியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 14,003 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 35 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 35 பேரும் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி விட்டனர். தற்போது, சேலத்தில் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்குத்தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 67 பரிசோதனை நிலையங்கள் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் 41 அரசு பரிசோதனை நிலையங்களும், 26 தனியார் பரிசோதனை நிலையங்களும் உள்ளன. நாள்தோறும் 13,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ரேஷன் கடைகள் மூலம் பயன்பெறும் அனைத்து குடும்பங்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களை, அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என கூறியுள்ளார்.

Categories

Tech |