குடிநீர் பிரச்சனைகள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து குடிமராமத்து பணிகள் குறித்தும் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், கோடை காலம் என்பதால் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கியதாக தெரிவித்தார். குடிமராமத்து திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பில் பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் ஆர்.எஸ்.பாரதி கைது நடவடிக்கைக்கு பதிலளித்த அவர், ” எஸ்சி பிரிவினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக ஆர்.எஸ்.பாரதி மீது புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட நடவடிக்கைக்காக அரசின் மீதும், முதல்வர் மீதும் மு.க.ஸ்டாலின் பழிபோடுகிறார்” என தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பில் இந்தியாவிலேயே தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார். கொரோனா தடுப்பு பணியில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பாராட்டு மற்றும் நன்றிகளை தெரிவித்தார்.
நோய் பரவலை கட்டுப்படுத்த, சரியான வழிமுறைகளை மத்திய அரசு வழிகாட்டுதலின் படி பின்பற்றுகிறோம் என தெரிவித்துள்ளார். படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மருத்துவ குழுவின் ஆலோசனை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக்கூறியுள்ளார்.