நிதியுதவிகளை படிப்படியாக மத்திய அரசு வழங்கி வருகிறது, ஆனால் கேட்ட அளவுக்கு கிடைக்கவில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து குடிமராமத்து பணிகள் குறித்தும் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜிஎஸ்டி வரி வருவாய் குறைந்ததால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூகப்பரவலாக இல்லை என்றும் குறிப்பிட்ட பகுதிகளில் தான் நோய் தொற்று உள்ளது என தெரிவித்துள்ளார். கொரோனவால் உலகமே ஸ்தம்பித்துள்ளது, இந்தியாவும் தமிழகமும் ஸ்தம்பித்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பில் பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசு அனைத்து வசதிகளையும் செய்து தரும் எனக் கூறியுள்ளார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், மத்திய அரசு வழிகாட்டுதலின்படி நடைபெறும் என தெரிவித்துள்ளார். குடிநீர் பிரச்சனைகள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கோடை காலம் என்பதால் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கியதாக தெரிவித்தார். குடிமராமத்து திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.