அடுத்து வரக்கூடிய இரண்டு நாட்களுக்கு 11 மாவட்டங்களில் வெயில் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக திருத்தணியில் 108 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி இருந்தது. கடந்த 3 நாட்களாக சென்னையில் 105 டிகிரி வரை பதிவாகிய நிலையில் தமிழத்தில் அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.
2 நாட்களுக்கு பிறகு வெப்பநிலை படிப்படியாக குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும் சற்று ஆறுதல் தரக்கூடிய செய்தியை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல தென் மேற்கே அரபிக் கடல் பகுதிகளுக்கு அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், 45 லிருந்து 55 கிலோ மீட்டர் அளவுக்கு காற்று வீச வாய்ப்பு இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை இருக்கும் என்றும் அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரியில் ஏழு செண்டி மீட்டர் மழை பெய்துள்ளது என்றும் கூறியுள்ளது.
சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் தாண்டும், இதனால் பகல் 11 மணி முதல் மதியம் 1 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.