தமிழகத்திலேயே சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் சென்னையை அடுத்த ஒரகடத்தில் நோக்கியா நிறுவனத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனையடுத்து அந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது. இதேபோல சென்னை வால்டாக்ஸ் சாலை முகாமில் தங்கியிருந்த ஆர்.பி.எஃப் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த 16 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று புதிதாக 569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 9,364ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,768 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகரை தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 3,791 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5,461 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.