தமிழகத்தில் ஏ.சி வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்க அரசு கோரிக்கை வைத்துள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தகவல் அளித்துள்ளார்.
ஜுன் ஒன்றாம் தேதி நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை தொடங்க உள்ளது என ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் கூறியுள்ளார். முதற்கட்டமாக 200 விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும், ஏ.சி. பெட்டிகள் இல்லாமல் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 80 சதவீதம் ரயில்கள் உ.பி மற்றும் பீகார் மாநிலங்களில் இருந்து இயக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 10 நாட்களில் 36 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சுமார் 2,600க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் 35 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். தமிழகம் – உ.பி, மகாராஷ்டிரா – தமிழகம், கேரளா – ஒடிஷா, ஆந்திரா – அசாம் இடையே ரயில்கள் இயக்கப்படும் என்றும் மேற்கு வங்க அரசு கேட்டுக்கொண்டால் ரயில்கள் இயக்கப்படும் என்றும் அவர் தகவல் அளித்துள்ளார்.
டெல்லியில் இருந்து 15 முக்கிய நகரங்களுக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளதாகவும், தமிழகத்தில் ஏ.சி வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்க அரசு கோரிக்கை வைத்துள்ளது என்றும் ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் கூறியுள்ளார். மேலும் முன் பதிவு கால அவகாசம் 30 நாட்களாக நீட்டிக்கப்படுவதாக தெரிவித்த அவர், முன்பதிவு இல்லாத பெட்டிகள் இருக்காது என கூறியுள்ளார். ரயில் நிலையங்களில் சமூக இடைவெளி மற்றும் அதீத சுகாதாரம் கடைப்பிடிக்கப்படும். உடனடியாக உண்ணும் உணவு வகைகள் மட்டும் வழங்கப்படும். ரயில் பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிட வாய்ப்பு உள்ளது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.