நேற்று தமிழக அரசியலில் திமுக – அதிமுக என அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இருந்ததை நாம் பார்க்க முடிந்தது.
கொரோனா தாக்கத்தால் ஒட்டுமொத்த உலகமும், ஊரடங்கில் இருந்து வருகின்றது. அரசியல் நடவடிக்கைகளும், அரசியல் பேச்சுக்களும் முடங்கி இருக்கும் இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று அரசியல் ஆட்டங்கள் அரங்கேறின. அதிகாலை தொடங்கி இரவு வரை திமுக – அதிமுக என அரசியல் ஆட்டம் அனல் பறந்தது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொண்ட திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பட்டியலின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆர்.எஸ் பாரதிக்கு ஜாமீன்:
அவர் மீது பதிவு செய்யப்பட்ட எஸ்/சி, எஸ்/டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நேற்று அதிகாலை அதற்கான கைது படலமும் அரங்கேறியது. கைது செய்யப்பட்டு நீதிபதி முன்பு நிறுத்தப்பட ஆர்எஸ் பாரதிக்கு, நீதிபதி இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதனிடையே ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு திமுக தலைவர், திமுக கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.அந்த வகையில் தான் தி.மு.க தலைவர் முக. ஸ்டாலினும் தனது கண்டன அறிக்கையை வெளியிட்டார். அதில் முக.ஸ்டாலின் தமிழக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.
எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடி:
மேலும், முதலமைச்சர், அமைச்சர்கள் செய்யும் ஊழல் குறித்து ஆர்.எஸ் பாரதி புகார் கொடுத்ததால் அவர் மீது இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊழல் தோல்வியை மூடிமறைக்க முதலமைச்சர் தனது ஊழலையும் நிர்வாக தோல்வியையும் திசைதிருப்ப குரோத எண்ணத்துடன் ஆர்.எஸ் பாரதி அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். நள்ளிரவு கைது நாடகங்களை எல்லாம் கண்டு திமுக அஞ்சாது. திமுக மிரளாது, நடுங்காது. இந்த மாபெரும் மக்கள் இயக்கம் பனங்காட்டு நரி, எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடி சலசலப்புக்கு அஞ்சாது என்ற கடும் விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.
பதிலடி கொடுத்த முதல்வர்:
மு க ஸ்டாலின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சேலத்தில் ஒரு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர், ஆர்.எஸ் பாரதி கைதுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆர்.எஸ் பராதி பெரிய விஞ்ஞானியா என்ற கேள்வி எழுப்பி இருந்தார் ? ஸ்டாலின் தவறான அறிக்கையை வெளியிடுகின்றார் என்று முதல்வர் கண்டனம் தெரிவித்திருந்தார்.ஆர்.எஸ் பாரதி கைது குறித்து முதலமைச்சர் பேசிய கருத்துக்கு எதிராக மீண்டும் ஒரு அறிக்கையை கடுமையான வார்த்தைகள் உடன் மு க ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
எடப்பாடி பழனிசாமி ‘மண்புழு’ முதலமைச்சர்:
அதில்,எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல; அவரது ‘அம்மா’ மீதே ‘டான்சி’ நிலபேர ஊழல் வழக்குப் போட்டு, ஆட்டம் காண வைத்தவர் திரு ஆர்.எஸ்.பாரதி”. என்னை ‘அவர் என்ன டாக்டரா?’ என்றும் திரு. ஆர்.எஸ்.பாரதியை, ‘அவர் என்ன விஞ்ஞானியா?’ என்றும் கேட்டுள்ள எடப்பாடி பழனிசாமியை ‘இவரெல்லாம் ஒரு முதல்வரா?’ என்று மக்கள் கேட்பது அவரது காதில் விழுந்ததாக தெரியவில்லை. பழங்குடிச் சிறுவனை செருப்பு தூக்கச் சொன்ன அமைச்சரை கண்டிக்கவோ; பெண் நிருபர்களைக் கொச்சைப்படுத்திய நடிகரைக் கைது செய்யவோ; நா கூசும் சொற்களால் நீதிமன்றம் & காவல் துறையை அவதூறு செய்தவரை பிடிக்கவோ முடியாத, எடப்பாடி பழனிசாமி ‘மண்புழு’ முதலமைச்சர்!” என்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார்.
ஆத்திரமடைந்த அதிமுக:
இது ஆளும் தரப்பை கடும் ஆத்திரம் முட்டியது, முதலமைச்சர் என்று கூட பார்க்காமல் ஒரு எதிர்க்கட்சி தலைவர் இந்த மாதிரியான வார்த்தைகளை உபயோகித்து அறிக்கை வெளியிடுவது என்று ஆளும் தரப்பு கடுமையான கோபத்தில் இருந்து வந்தது இந்த கோபத்தை எப்படி வெளிப்படுத்தும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது திமுகவினர் மீது மொத்தமாக 96 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது அதிமுக அரசின் கோபத்தின் வெளிப்பாடாக தான் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது.
திருப்பி அடித்தது:
ஆர்எஸ் பாரதியை கைது செய்யப்பட்டு நீதிபதி முன்பு நிறுத்த செல்லும்போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ரங்கநாதன், ரவிச்சந்திரன், ராஜா உள்ளிட்ட 96 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், தொற்று நோயை பரப்பக்கூடிய கவனக்குறைவான செயல்பாடுகளில் ஈடுபட்டது என மூன்று பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முக.ஸ்டாலின் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி அறிக்கை வெளிட்டதற்கு திருப்பி அடிப்பதை போல தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.