கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்காவுடன் கைகோர்க்க சீனா தயார் என்று தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் சீனா மீது கடும் கோபத்தில் இருக்கின்றன. குறிப்பாக கொரோனா தாக்குதலுக்கு சின்னாபின்னமாகி உள்ள அமெரிக்கா சீனாவை ”வந்து பார்” என்று சொல்லும் அளவிற்கு வார்த்தைகளையும், கருத்துக்களையும் தெரிவித்து வந்த நிலையில், அமெரிக்காவுடன் சேர்ந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீனா தயாராக இருக்கிறது என்று சீன நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, கொரோனவைரஸ் மற்ற நாடுகளைப் போல சீனாவையும் தாக்கியுள்ளது. சீனாவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது, ஆனால் துரதிஸ்டவசமாக கொரோனாவை போன்ற அரசியல் வைரஸ் அமெரிக்காவில் பரவி வருகிறது. அந்த வைரஸின் நோக்கம் சீனா மீது அவதூறுகளை பரப்பி, சீனா மீது தாக்குதல் நடத்தி, சீனாவின் நம்பிக்கை தன்மையை சீர்குலைபதாகும் . சில அமெரிக்க அரசியல்வாதிகள் சீனாவுக்கு எதிராக சதி திட்டம் தீட்டி ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
சீனாவுக்கு எதிராக சர்வதேச அளவில் பதியப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் சட்ட விதிகளுக்கு முரணானது. மனசாட்சிக்கு எதிரானது, இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்யும் நபர்கள் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருக்கிறது. ஆனால் சிலர் இதற்கு தடையாக இருந்து, இரு நாடுகளுக்கும் பனிப்போரை உண்டாக்க முயற்சி செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார.
கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா கடும் விமர்சனங்களை முன்வைத்தது மட்டுமல்லாமல் உலக நாடுகளே சீனாவை கேள்வி கேட்கும் அளவிற்கு திருப்பி விட்டது. அதன் நீட்சியாக சுமார் 150க்கும் மேற்பட்ட நாடுகள் சீனாவை கண்டித்து புகார் கொடுக்க தொடங்கினர். இந்த நிலையில்தான் சீனா தற்போது அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக சர்வதேச வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.