சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,071ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 587 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,981 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டையை தொடர்ந்து தண்டையார் பேட்டை மண்டலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை ராயபுரம் மண்டலத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ராயபுரம் மண்டலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 2,071 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 4,781 பேர் குணமடைந்துள்ள நிலையில் 77 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கோடம்பாக்கம் – 1,460, திரு.வி.க நகரில் – 1,188, அண்ணா நகர் – 867, தேனாம்பேட்டை – 1,118, தண்டையார் பேட்டை – 1044, வளசரவாக்கம் – 703 அடையாறு – 579 பேரும் சென்னையில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை மாநகர பகுதியில் இன்று 565 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்று சென்னையில் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்களை இன்று மாலை சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிடுவார்கள் என கூறப்பட்டுள்ளது.