சென்னையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று 587 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 10,576 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணிகளில் 204 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதில் எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 100 , அரசு ராயபுரம் மருத்துவமனையில் 45 , கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 30 , திருவல்லிக்கேணி கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் 29 கர்ப்பிணிகளுக்கும் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கர்ப்பிணி பெண்கள் கொரோனோவால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கர்ப்பிணிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மருத்துவமனைகளில் நோயாளிகள் காத்திருப்பு அறை, இருக்கைகள், கழிவறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.