சென்னை கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகளை திறக்க அனுமதித்தது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. சென்னையில் 17 தொழிற்பேட்டைகளை திறக்க நேற்று தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.
அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாதவது, ” சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள், இன்று முதல் அத்தொழிற்பேட்டை பகுதிகளிலேயே உள்ள 25% தொழிலாளர்களை மட்டும் கொண்டு செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது” என்று தமிழக அரசு அறிவித்தது.
எனினும், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் இருந்து பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு அனுமதி இல்லை. மேலும் பல்வேறு நிபந்தனைகளை அறிவித்தது. அதில், ” தினமும் தொழிலாளர்களுக்கு தெர்மல் ஸ்கேன்னர் மூலமாக உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும். பணியாளர்கள் அனைவரும் முகக் கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
தினமும் காலை மற்றும் மாலையில் தொழிற்சாலையை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். 55 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். தொழிற்சாலையில் உள்ள கழிப்பறையை தினமும் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
சோப்பு மற்றும் கிருமி நாசினி உபயோகப்படுத்தி அடிக்கடி கைகளை கழுவும் நடைமுறையை பின்பற்றவும், போதுமான கிருமிநாசினிகளைப் பயன்படுத்தவும், போதுமான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இது தவிர, பணியாளர்கள், மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்கவும், அரசால் தனியாக வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பான அரசாணையை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது.