ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள தம்ஹால் ஹன்ஜிபோரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் இன்று காலை இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, 34 ஆர்.ஆர்.(ராஷ்டிரிய ரைபிள் பிரிவு வீரர்கள்), சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், மற்றும் குல்கம் போலீஸ் ஆகியோர் அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் தாக்கத் தொடங்கினர். அதற்கு பாதுகாப்புப்படை வீரர்களும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
அப்போது 3 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுற்றிவளைத்தனர். மேலும் தீவிரவாதிகளை சரணடையுமாறு பாதுகாப்பு படையினர் கேட்டனர். ஆனால் பயங்கரவாதிகள் தரப்பில் துப்பாக்கிசூடு தொடர்ந்து நடத்தப்பட்டது. அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு மட்டும் ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் 30 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக செய்திகள் வந்துள்ளதாகவும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள நிலப்பரப்பில் 240 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாகவும் ஜம்மு காஷ்மீர் டிஜிபி கூறியுள்ளார்.