ஈரோடு மதிமுக வேட்பாளர் கணேஷமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்ய காலம் தாழ்த்தியதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திமுக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதிமுக_விற்கு ஈரோடு நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டு , மதிமுகவின் பொருளாளர் கணேஷமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய காலை 11.30 மணிக்கு சென்றார். அவருக்கு வேட்புமனு தாக்கல் செய்ய அவருக்கு 12.30 வரை நேரம் ஒதுக்கிய நிலையில் அவரை வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகின்றது .
இந்நிலையில் தனக்கு அடுத்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர்களை அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , தன்னை வேட்புமனு செய்ய காலம் தாழ்த்துவதாகவும் கூறி வேட்பாளர் கணேஷமூர்த்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள் அவரை சமாதானம் செய்து அவரை வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதித்தனர். வேட்பாளர் போராட்டம் நடத்தியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.