சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க நபர் அரசு மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னை மாநகரில் மட்டும் ராயபுரம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மணலியில் எம்எம்டிஏ பகுதியை சேர்ந்தவர் இவர். நேற்று மதியம் இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று காலை மருத்துவமனையின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த நிலையில், கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையிலும், பிற அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் விரக்தியில் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.