அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி முன்ஜாமீன் மனு மீதான வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராகவும் உள்ளார். கடந்த, 12ல் கரூர் கலெக்டர் அன்பழகனை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்தார். பின், நிருபர்களிடம் பேசும்போது, கலெக்டரை படித்த முட்டாள் எனவும், இனிமேல் ஆய்வு கூட்டத்துக்கு எங்களை அழைக்கமால் இருந்தால், கலெக்டர் வெளியே நடமாட முடியாது’ எனவும் தெரிவித்தார்.
இதுகுறித்து தான்தோன்றிமலை போலீசில், கலெக்டர் புகார் செய்தார். இதன்படி செந்தில் பாலாஜி உள்பட, 25 பேர் மீது, ஆறு பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கரூர் ஆட்சியரை மிரட்டிய புகார் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ” ஆட்சியருக்கு எந்த மிரட்டலும் விடுக்கவில்லை எனவும், நிருபர் கூட்டத்தில் பேசியதை வைத்து வழக்கு தொடரபட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. செய்தியாளர்கள் கூட்டத்தில் தான் பேசி 4 நாட்கள் கழித்து திட்டமிட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது” . இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர்.